தமிழ் கவிதைகள்....
அன்று விடுமுறை நாள்..
ஏழு மணிக்கே திறக்கப்பட்டது...
நகரத்தின் இடையிலுள்ள பூங்கா...
உயரமான பச்சை மரங்கள்...
கைகோர்த்து நிற்கும் வேலி...
நடுவில் புன்னகைக்கும் மலர்களை...
தாங்கி நிற்கும் மலர்ச்செடிகள்....
இங்குதான் வர சொன்னார்...
யாரையோ எதிர்பார்த்து வந்தவர்..
தன் காத்திருப்பை பதிவுசெய்தார்...
சீறிவந்த மோட்டார் சைக்களில்
இறங்கிய சில இளங்காளைகள்
ஓரிடத்தை ஆக்கிரமித்து அமர்ந்தார்கள்
போகும் நடை பயணத்தில்
சிறு களைப்பார நிழலின்
தஞ்சம் தேடி ஒருசிலர்
சில நாழிகைகளின் மரணத்தில்
எங்கிருந்தோ வந்த மனிதர்களைக்கொண்டு
நிரம்பி வழிந்தது பூங்கா
காதலர்கள், 
தம்பதிகள் ,குழந்தைகள்
நண்பர்கள், முதியோர்கள் என்று
அடையாளப்படுத்தியது அவர்களின் இருப்பை
சிலர் உறங்கிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகள் ஓடி விளையாடியும்
பலர் பேசியும் சிரித்துக்கொண்டும்
ஒரு சிலரோ மௌனமாக
வந்தவர்கள் தின்று போடும்
மிச்ச உணவையும் காத்து
கிளைகளில் பறவைகளும்
சில பூனையும் நாய்களும்
எத்தனை நிறங்களில் மனிதர்கள்
கண்ணீர் ,புன்னகை, மௌனம்
மனதிலிருந்து இறக்கி வைக்கிறார்கள்
அந்த தனிமை தருணத்தில்
காதல்,திருமணம்,எதிர்காலம்
என்ற முக்கிய விடையங்களுக்கு
ஆக்கபூர்வ தீர்மானங்கள் தீட்டுகிறார்கள்
அங்கு வந்தவர்களில் சிலர்
சந்திப்புக்களும் காத்திருப்பும்
பரிமாறும் பேச்சுக்களும்
தத்தம் அடையாளம் கண்டபின்
சிலர் எழுந்து சென்றனர்
கதிரவன் சாயும் மாலை
கூடு தேடும் பறவைகளைப்போல்
நான்கு திசைகளில் பிரிந்தனர்
பூங்காவில் கூடிய மனிதர்கள்
நேரமாச்சு நேரமாச்சு கிளம்புங்க
மீதம் இருந்தவர்களை விரட்டியபடி
பூங்காவின் காவல்காரன்
இரவு போர்வையாக மூட
அகம் முழுவதும் நிசப்பதம்
நாளை அவர்கள் வருவார்கள்
என்ற ஆழமான நம்பிக்கையில்
உறங்குகிறது பூங்கா.....
No comments:
Post a Comment